எங்களையும் ஏற்றிய உனது பூதப்பேரூந்தில் !
பறைந்துகொண்டது பல ஸ்வரங்கள் ஆயிரங்கள்!
-சாக்ய மோஹன்-
(பல்லவி)
எங்களைக் கூட பெத்தாங்கடா
உயிர் உருகும் மடியிலே
தொட்டா தீட்டு படுமா?
தொடாதேடா நாயே!
ஜாதியும் பேதமும் பாத்தா - அந்த
சாமியைக் கூட ஒதைக்கிறோம்!
தீண்டாமைக் கொடுமை செஞ்சா - ஹிந்து
கோயிலை காலில் மிதிக்கிறோம்! (எங்களைக் கூட ...)
(சரணம் - 1)
ஊர் தெருவுல சாவு - அங்கு
தப்பு அடிப்பது தப்பய்யா!
ஊர் பொணத்தை சொமந்து - அதை
கொளுத்தும் வேலை தப்பய்யா!
ஊர் பொணத்தை சொமந்து - அதை
கொளுத்தும் வேலை தப்பய்யா!
போதிக்கும் வேலை தப்பய்யா!
அடிமை வேலை செஞ்சி - இன்னும்
அலை கழிவது ஏனய்யா?
உரிமைக் கேட்டு களம் புகுந்து
ஒசந்து நிப்போம் வாங்கய்யா! (எங்களைக் கூட...)
(சரணம் - 2)
சேர் இருக்கும் கொளத்திலே
நீர் எடுத்தா தீட்டய்யா!
ஊர் தெருவுல நடந்தா - எங்க
காத்து கூட தீட்டய்யா!
டீ கடையிலே தீட்டு - ஹிந்து
கோயிலுக்குள்ளே தீட்டு!
எங்க காலு செருப்பணிஞ்சா
உங்க கண்ணுல முள்ளு குத்தும்! (எங்களைக் கூட...)
பரிமேலழகர் மற்றும் உ. வெ. சாமிநாதர் போன்ற போலி "தமிழ் ஜாதி தாத்தா"க்களால் "வள்ளுவ பறையர்" எனச் சுருக்கப்பட்ட களபறையர் புத்த தம்ம காலத்து சாக்ய பேரறிஞர் போதிசத்துவர் நிலை அடைந்த திருவள்ளுவர் தமிழில் வழங்கிய "திரிக்குறள்" எனும் பதினெண் கீழ்கணக்கு நூல், பண்டிதர் அயோத்திதாசர் குறிப்பிடுவது போல், "உலகு புகழ் அறிய திரிபேத வாக்கியங்கள் என்றும், திரிபீட வாக்கியங்கள் என்றும் வழங்கிய மூவருமொழியாம் முதல் நூலுக்கு வழி நூலாகத் தோன்றியவை திரிக்குறளும், சார்பு நூலாக தோன்றியவைகள் திரிமந்திரம், திரிவாசகம், திருவெண்பா, திருமாலை, திரிகடுகம், சித்தர்கள் நூல் முதலியவைகள் ஆகும்."நமது பாட்டன் அறிவுச் சொத்தை எல்லாம் நம்மிடம் இருந்து பிடுங்கி தமதாக்கிக்கொள்ளும் தமிழர் ஜாதிகளுக்கு பண்டிதர் கூறும் செய்திகள் அதிர்ச்சியாகவும் இருக்கும்.
"இத்திரிக்குறளுக்கு "திரு"வென்னும் அடைமொழி சேர்த்துத் "திரு"க்குறள் என சிறப்பு வழங்கினும் தன்ம பிடக, சுத்த பிடக, வினைய பிடக என்னும் மகட பாஷா முதல் நூலுக்கு திராவிட பாஷா வழி நூலாம் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் திரிக்குறளே உடன்பாடாதலின்" திருவென்னும் அடை மொழி சிறப்பாயினும், தமிழியப்படுத்துதலின் பொருட்டு சைவ ஜாதிகள் செய்த இருட்டடிப்பாகவே இன்றைய நிலையில்" சாக்ய குடிகளின் பூர்வ சொத்து களவாடப்பட்டு "திருக்குறள்" என வழங்கப்பட்டு வருகிறது. நாம் இந்த போதி அறிவுப் பொக்கிஷத்தை நமதென்று அறிவிக்க இதன் மூலப் பெயரான "திரிக்குறள்" எனும் பெயரை மீண்டும் மீட்க வேண்டும் இதன் வழி இந்த திரிபிடகத்தின் வழிநூலை மீட்கும் நிலையில், நமது அறிவாற்றல் மிக்க சமூகம் ஏன் தாழ்த்தப்பட்ட சமூகம் என ஆக்கப்பட்டது என்பதை இந்த ஜாதிகளுக்கு விளக்கலாம். விவரம் அறிய பண்டிதமணி அயோத்திதாசரின் "தமிழன்" பத்திரிக்கையை அடியொற்றி வெளியிடப்பட்ட "அயோத்திதாசர் சிந்தனைகள்" தொகுப்புகளை படியுங்கள்.
-சாக்ய மோஹன்-
புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்காத நாடு உலகத்தில் மிக அரிதே. இந்தியாவும், புலிகளின் கோரைப் பற்களில் கடித்துக் குதறும் பயங்கரவாதத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, தனது பிரதமரை மனிதவெடியால் (கருணையில்லாமல் தலித் பெண்ணை பயன்படுத்தி) வெடித்துச் சிதரவைத்த மகாகொடூர சைவ அடிப்படைவாதிகள் என்பதால் புலிகள் அமைப்பை தடை செய்தது. ஆயினும், தமிழ் ஜாதிகளுக்கு மட்டும் புலிகளின் பயங்கரவாத செயல்கள் நியாயமாகப் படுவதில் ஆச்சரியம் இல்லை. இந்தியாவில் ஹிந்து பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் புலிகளின் அமைப்பிற்கும் பல ஒற்றுமை இருக்கின்றன. மத-ஜாதி வெறியோடு வெற்று தமிழ்-இனத்தேசிய வெறியும் இழைந்து, ஒரு கொலைவெறி அமைப்பாகவே கட்டமைக்கப்பட்டதே புலிகளின் தமிழ்-ஈழ அமைப்பு.
புலிகள் ஜனநாயகத்திற்காக ஆயுதம் எடுத்தார்களா என்றால், அதுவும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால், திமுக தலைவர் கருணாநிதியிடம் பேட்டி எடுத்த சிஎன்என் - ஐபிஎன் தொலைக்காட்சி பிரபாகரனின் சர்வாதிகாரத்தினின்று சிறிதும் நெகிழாத அரசாங்கமாகவே புலிகளின் ராஜாங்கம் அமையும் என்ற பிரபாகரனின் சர்வாதிகார அடைபுக்கு கருணாநிதி மறுப்பு தெரிவித்து தான் ஜனநாயகத்திலேயே நம்பிக்கை உடையவராகவும் ஆதலால் தான் சர்வாதிகாரத்தை அடியொற்றி நிற்கும் புலிகளின் எண்ணத்திற்கு ஆதரவு தர முடியாது என்றும் பேட்டி அளித்தார். இதை வெறும் எம்ஜியாரின் புலி-ஆதரவுக்கு எதிரானதாக பல 'தமிழறிஞர்கள்" வெறுத்து ஒதுக்கினாலும், அண்ணல் அம்பேத்கர் வழங்கிய அரசியல் சட்ட இந்தியாவின் ஜனநாயக மாண்பின் நிர்பந்தமாகவே இதை அணுகவேண்டியிருக்கிறது. மொழி-இன-மதவாத போர்க் காலமாகவே கிட்டத்தட்ட முப்பது ஆண்டிற்கும் மேலாக அமைதி இழந்த இலங்கைத் தீவில் இன்று போர் இல்லை. எங்கு எப்போது யாரின் மீது கண்ணி வெடி வெடிக்கும் என்ற பயமும் அச்சமும் இன்று இல்லை. ஜாதி ஹிந்துக்கள் (தமிழர்) புத்திஸ்ட் மக்கள் மீதோ அல்லது புத்திஸ்ட் மக்கள் ஜாதி ஹிந்துக்கள் (தமிழர்) மீதோ திடீர் தாக்குதல்களோ, பாலியல் வன்கொடுமைகளோ, புத்த விஹாரைகளோ ஜாதி-ஹிந்துக்களின் கோயில் கூடாரங்களோ தாக்குதல்களுக்கு உட்படும் சூழலோ இல்லை. அரச வன்முறையோ புலிகளின் வன்முறையோ அதன் வழி நடந்தா அந்த பயங்கரவாதமோ இன்று இல்லை.
இன்றைக்கு இலங்கை சூழல் வேறு. அங்கு எஞ்சி இருக்கும் மக்கள் தாகமாகவும், பசியுடனும், தீரா வறுமையுடனும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கடைநிலைக்குத் தள்ளப்பட்ட தமிழ் பேசும் இலங்கை வாசிகள் தமக்கு சுயமரியாதையுடன் கூடிய சுதந்திர வாழ்க்கையை மீண்டும் வாழ விரும்புகிறார்கள். எந்த நேரத்திலும் அரசுப் படையினருடன் தாக்குதல் நடத்த ஆட்சேர்ப்பு எனும் பேரில் புலிகள் நடத்திய சவாதிகாரம் இன்றில்லை, மாறாக, தமிழ் பேசும் இலங்கை குடிகள் அரசு படையிலும், காவல் துறை மற்றும் சிவில் மற்றும் முக்கிய பணிகளில் சேரும் நிலைக்கு தமது குழந்தைகளை தகுதி உடையவராக்க வேண்டும். அதற்கு தரமுள்ள கல்வியை பிச்சை எடுத்தாவது கொடுக்கவேண்டும். இலங்கை தமது தேசம் எனும் பற்றும் இனியும் மொழி-இன-மத பயங்கரவாத தேசியம் எனும் மாய வளைக்கும் தம்மை சிக்க வைத்துக்கொள்ளாத விழிப்புணர்வும் அற உணர்வும் அறிவுத் தேடலும் வேண்டும் தமிழ் பேசும் குடிகளுக்கு. தமிழ் பேசும் மக்கள் சிங்களத்தையும், சிங்களம் பேசும் மக்கள் தமிழையும் கற்று தெளியவேண்டும். தமிழும் சிங்களமும் பாலி எனும் அமுதத்தில் இருந்து பிறந்த அமுதப் பேழைகள் எனும் வரலாற்று உண்மை தெரிய அறிய, பரந்து விரிந்த விசால வெளியில் தமது மக்களை வளர்த்தெடுக்க வேண்டும். இந்தியாவில் தமக்காக வெற்றாய் வரிந்துகொண்டு நின்று போராட்டம் நடத்துவதாக இல்லாத தேசியம் பேசி அரசியல் லாபம் அடையும் "தமிழிய" வாதிகளை ஒதுக்க வேண்டும். அவர்கள் அரசியல் சூழ்ச்சிக்காரர் என அறிகிற தெளிவை பெற வேண்டும். போருக்குப் பின் அமைதி தானே ஒழிய, மீண்டும் வரிந்துகட்டிக் கொண்டு மொழி-இன-மத சாக்கடைக்கும் மீண்டும் விழுந்து மடியும் நிலையை தவிர்க்க வேண்டும். இனியும் ஈழம் எனும் ஹிந்து தேசம் அமையும் என்று "கற்பனை" கடலில் முத்தெடுக்க பல கணினி வலைப்பின்னல்களில் வெறியூட்டும் மாந்தரை ஒதுக்கி, "தமது தேசம் இலங்கை" எனும் உரிமை கொண்டாடும் தேச நேசம் கொள்ளுங்கள். தேசிய வெறியை கனவிலும் எண்ணாத அறத்தை அடியொற்றி கட்டி எழுப்புங்கள் மானுட இயக்கங்களை! தமது குடியுரிமை, பேச்சுரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்புரிமை, குடியிருப்பு உரிமை, நாட்டின் எந்த பகுதிக்கும் சென்றுலாவும், அல்லது குடிபெயரும் உரிமைப் போன்ற அடிப்படை உரிமைகளை பெற்றுவிட ஜனநாயக அடிப்படையில் போராடுங்கள்! இந்தியாவில் இருந்து உதவி வரும் என்று எதிர்ப்பார்த்து கிடைத்தது துயரமும், அவமானமும் தான். உங்கள் தேசம், உங்கள் மக்கள், உங்கள் அரசாங்கம் எனும் பற்றை பறை சாற்றி நிலைநாட்டும் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து கிழக்கில் தினம் முளைக்கும் பகலவனாக அறிவாற்றல் பருங்கள்!
தமிழர் எனும் அடையாளத்தில் துயரம் இருக்கிறது; இத்துயரத்திற்கான காரணம் இன்னொரு பேரினவாதம் என்பதைவிட தமிழ் பேசும் சைவ வெள்ளாள சூத்திர ஜாதியமே எனும் முக்கிய காரணத்தை அறியுங்கள். ஜாதியின் பேரால் தீண்டாமை வன்கொடுமை விளைக்கும் சைவ வெள்ளாளரை எதிர்க்கும் போராட்டத்திற்கு உகந்த ஜனநாயக சக்தியாக உருவெடுக்கும் ஆற்றலை பெற பேரறிஞர் அண்ணல் அம்பேத்கர், பண்டிதர் அயோத்திதாசர் போன்ற ஜாதி எதிர்ப்பு போராளிகளின் தத்துவங்களை உள்வாங்கி விழிப்புணர்வு பெறுங்கள். தமிழர் சமூகம் அடிப்படையில் ஜாதிய சமூகமே என்பதும் நியாமற்ற ஜாதிகீழ்-மேலிறக்கப் பண்புகள் மலிந்து கிடக்கும் தமிழியம் என்பதும் உய்த்துணர, சமூக-அரசியல் வரலாற்றை கவனமாக அறிந்துகொள்ளும் பயிற்சி அரங்கங்களை உங்களின் வலுவான அமைப்பியலாக உருவாக்குங்கள்!
இந்தியாவில் மோகன்தாஸ் காந்தி போன்ற தலித்-விரோத சக்திகளை வீழ்த்தும் மாபெரும் சக்தியாக அண்ணல் அம்பேத்கர் எழுந்த எழுச்சி தத்துவம் இலங்கையிலும் தேவையாக இருக்கிறது. தீண்டா குடியாக இருந்து தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்ட அண்ணலை விட உங்களின் இன்றைய வளர்ச்சிக்கு வேறு வழிகாட்டி இருப்பதாகத் தோன்றவில்லை. ஜாதியம் இழைந்த இந்திய சூழலை வெகுவாக மாற்றி வருவது அண்ணல் அம்பேத்கரின் தத்துவமும், அவரின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வளரும் இந்திய தேசமும் தலித் குடிகளுமே இதற்கு சாட்சி. இந்தியாவில் உள்ளதைப்போல் தலித் குடிகளுக்கு கட்டாய ஆரம்ப கல்வி முதல் பட்ட மேற்படிப்பு மற்றும் தொழில் கல்வி பட்ட படிப்பு வரை இலவசமாக இலங்கை அரசு வழங்க வேண்டும் என்பதும், மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பும், இந்தியாவில் அமுல்படுத்தப்படும் ரிசர்வேஷன் முறைப்படி வழங்கும் உரிமைகள் இலங்கை தலித் குடிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இதற்கான மாதிரி சட்ட வடிவங்களை அண்ணல் அம்பேத்கரின் பேராண்மை அரசியல் சட்ட ஆதாரங்களில் இருந்து எடுத்துக் கொண்டு "தலித் சமூக மேம்பாட்டு முன்னணி" போன்ற ஜனநாயக அமைப்புகள், அரசுசாரா நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் போராட வேண்டும். தீண்டாமை மற்றும் ஜாதிய ஒடுக்குமுறைகள் ஒழிப்புச் சட்டமும், தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டமும் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற வேண்டும் என்ற போராட்டக் கருவும் அண்ணல் அம்பேத்கரின் கருத்தியலாக இலங்கையில் தமிழ் பேசும் தலித் குடிகளுக்கு பேராற்றலை கொடுக்க வல்லது என்றால் மிகை இல்லை.
வீழ்ந்தும் மடியவில்லை எனும் விடுதலைப் புலிகளும், தலித் விடுதலைக் கருத்தியலை விட்டு விலகி அரசியல் லாபத்திற்காக புலிகளாக மாறிவரும் விடுதலை சிறுத்தைகளும், சூத்திர ஜாதியை அடியொற்றி கட்டப்படும் நாம் தமிழர் (தேவ-கள்ளர்) கட்சியும், தெலுங்கே தாய்மொழியானாலும் தமிழன் வரையறைக்குள் கட்டிவைத்துக்கொள்ளும் நாயுடு ஜாதி மறுமலர்ச்சி கட்சியும், தூங்கும்போது தலித் கழுத்தை அறுக்கும் கீழ்-சூத்திர பாட்டாளி (வன்னியர்) கட்சியும் மற்றும் உள்ள தமிழிய அடிப்படைவாதியர் பேசும் அரசியல் என்பது மாயையே. ஆரியம் போன்றே திராவிடமும் (திராவிஷமும்) மாயையானது. தம் மீது திணிக்கப்பட்ட தீண்டாமை பிராமண-வெள்ளாள சைவ ஜாதியத்தின் திணிப்பே. தலித் குடிகள் என்றும் தீண்டப்படாத இழி ஜனம் அல்ல; பஞ்சமாப்பதகங்களை தீண்டா குடிகள் என்பதை இன்றைய தலித் குடிகள் அறிய வேண்டும். சூத்திரனோ பிராமணனோ ஜாதியுடம் பிறக்கிறான்; ஜாதித் திமிருடன் வாழ்கிறான்; ஜாதியோடே சாகிறான். இறந்த பிறகும் அடுத்த சொர்க்க-நரக உலகத்தில் சூத்திரருக்கும் பிராமணருக்கும் இன்னபிற ஜாதிப் பிறப்புகளுக்கும் ஜாதி இருக்கிறதே பிளிர்கிறான். ஜாதியற்ற தலித் குடிகள் ஜாதியத்தை எதிர்க்கும் சாக்கிய மரபை இன்றும் தொடர்ந்து தம் மீது சூழ்ச்சியால் திணிக்கப்பட்ட தீண்டாமை வன்கொடுமைக்கு எதிராக போராடி மேலவர வேண்டிய எல்லா ஜனநாயக உத்திகளையும் பயன்படுததியவர்களாக தென் ஆசிய பிராந்தியத்தில் ஒரு மானுட எழுச்சியாக இன்றும் திகழ்கின்றனர் எத்தனையோ வகையான அரச-ஜாதிய வன்கொடுமைகளையும் உள்செரித்தவாறு!
ஆகவே, வேண்டும் அண்ணல் அம்பேத்கரின் விடுதலைத் தத்துவம்! இன்றைய இலங்கை வெள்ளாள சைவ தமிழ் ஜாதிச் சூழலில் வேண்டும் புரட்சியாளர் அம்பேத்கரின் தலியீடு!