மெட்ராஸ் - மாநகர மறுவாசிப்பு
--சாக்ய மோஹன்--
1522 ஆம் ஆண்டில் போர்ச்சுகீசியர் கட்டிய கோட்டைக்கு சான் தோம் என பெயர் வைத்தனர். 1640 ஆண்டுக்குப் பின் "நரி மேடு" என்றும் "பறையர் காலனி" என்றும், "கறுப்பர் நகரம்" என்றும் அழைக்கப்பட்ட நகரம், கிழக்கிந்திய கம்பனியாரால் "மெட்ராஸ்பட்னம்" என வழங்கலாயிற்று. நரிமேட்டை வளப்படுத்தி நகரமாக்கிய பூர்வீகிகளே பறையர் காலனி மற்றும் கறுப்பர் நகரங்களை விரிவாக்கி செயின்ட் ஜார்ஜ் டவுன் விரிவாக்கத்துக்கு வழிவகுத்தனர். இருப்பினும் "வெள்ளையர் நகர விரிவாக்கம்" பூர்வீகிகளை மெல்ல மெல்ல வெளியேற்றி, அவ்விடத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை சிறப்புற கட்டி, கறுப்பர் நகர கடற்பகுதி, நரிமேடு மற்றும் பறையர் காலனி ஆகிய மூன்று பகுதிகளும் சேர்ந்த "மெட்ராஸ்" உருவானது.
காலனிய வரலாற்றில் மெட்ராஸ் மற்றும் வேலூர் பகுதிகளில் இருந்து பிரிடிஷ்-இந்திய படைகளில் "பறையர் பட்டாலியன்" எனும் சேனையை உருவாக்கிய இந்த கறுப்பர் குடிகள், பிரிடிஷ் துரைமார்களின் துபாஷி மற்றும் பட்லர்களாக இருந்தனர் என்பதும் மெட்ராஸ் குடிகளின் அடையாளம். பூர்வீகக் குடிகளை இன்னும் நகரத்தின் உள்நிலப்பகுதிக்கு குடிபெயரவைத்த பிரான்சிஸ் டே வழங்கிய மாநகர திட்டம் பூர்வீகக் குடிகளை புறம்தள்ள நேரிட்டாலும் அம்மக்கள் இன்றும் தமது அடுத்துவரும் பரம்பரைகளோடு மாநகரத்தை விட்டு வெளியேறாமல் பல அரசியல் இடிபாடுகளுக்கு இடையே தமது அடையாளங்களை துறக்காமல் வாழ்கிறார்கள் என்பதுதான் ஞானவேல் ராஜா தயாரித்த "மெட்ராஸ்".
எண்பது ஆண்டுகளாக ஜாதிய, மொழி-இன அடையாளங்களுடன் பயணித்த தமிழ் திரைப்பட உலகம் மெட்ராஸ் என்றாலே அதிரடி, கொலை, கொள்ளை, பயங்கரவாதம் மற்றும் தமிழை கொச்சைப்படுத்தும் 'மெட்ராஸ் பாஷை" என்றெல்லாம் புரட்டுப் பேசி அம்மக்களை இழித்தும், கேலி செய்தும் பிழைப்பு நடத்திய "தமிழ் சினிமா"வுக்கு, தமிழ்-திராவிட செண்டிமெண்ட், ஹிந்துயிச பின்னணியில் கடவுளையும் தன்னையும் தூக்கிப்பிடிக்கும் ஹீரோ-மைய படங்களையே சார்ந்து இயங்கும் நிலையே இதுவரை இருந்துவந்தது. இந்நிலையில், பா. ரஞ்சித்தின் "அட்டகத்தி" திரைப்படம் மெட்ராஸ் புறநகர்வாழ் மக்களின் எளிமையையும், அன்றாட வாழ்வியலையும், காதல் வயப்படும் இளைய சமூகத்தின் நிலையாமையையும் விளக்கும்படியாக இருந்தது. ரஞ்சித்தின் ரெண்டாம் படமான "மெட்ராஸ்" தமிழ் திரை வரலாற்றில் நகரவியல் விளக்கும் அரசியல், சமூக-பொருளாதார விழிப்புணர்வைத் தூண்டும் முதல் முயற்சியாக திரைக்கு வந்திருக்கிறது.
இத்தனை ஆண்டுகளாக மாநகர திராவிட அரசியல் ஒடுக்குமுறைக்கு பலியாகிவந்த மக்களின் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள எழும் கலகக்குரலும், கபிலனின் பாடல் மூலம் விளக்கும், "கவலை கதவை உடைக்கும் கருவியாய் இருப்போம் / இருக்கும் இடத்தில் இருந்து பறவையாய் பறப்போம்" எனும் வாழ்வியல் சிந்தனை விளக்கும் அறிவின் முதிர்ச்சியும், "உழைக்கும் இனமே உலகம் ஜெயித்திடும் ஒருநாள் / விழித்து இருங்கள் விரைவில் வருமே அந்த திருநாள்!" எனும் நம்பிக்கையும், "மெட்ராஸ்" எனும் பேரை அசைக்க முடியாது "இது கறுப்பர் மண்" என்று மாநகரப் பெயரை மாற்றும் திராவிட அரசியலுக்கு எதிர்குரல் கொடுக்கும், "எங்க ஊரு மெட்ராசு அதுக்கு நாங்கதானே அட்ரசு" சொல்லாடல் மூலம் மாநகரத்தின் மீதான உரிமைகோரும் அதிகார மீட்பும், அடையாள வேட்கையும் படம் முழுக்கத் தெரித்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். "ஒன்ஸ் அப்பான டைம், ஜார்ஜ் டவுன்ல...வியாசார்பாடில... அதாம்பா...ரியல் மெட்ராஸ்பா.." என முழங்கும் ஜானி, மாநகர பூர்வீகிகளின் அடையாள அரசியலின் தூணாக நிற்கிறார். ஜானி பார்வையாளர்க்கு உற்சாகம் தந்தாலும், அரசியல் விமிரிசர்களுக்கு புரிந்திருக்கும் இது மாநகரத்தை ஆட்கொண்ட இடைநிலை ஜாதி-வர்க்க திராவிட அரசியலை உடைக்கும் பெருங்கலகக்குரல் என்று.
காலியாக இருக்கும் பொதுச் சுவர்களில் அரசியல் சின்னம், கட்சித் தலைவர்களின் உருவப்படங்கள், தேர்தல் பிரச்சார வாசகங்கள் வரைவதும், தேர்தல் வரும்போது, சுவர் கிடைக்காத கட்சி பிரமுகர்கள் குறிப்பிட்ட தொகுதிகளில் மக்களிடையே விரோதம் வளர்த்து ரத்தக் களறியாக மாற்றும் "சுவர்" அரசியல் தான் கதையின் மையக்கரு. மாநகர வீட்டுவாரியக் குடியிருப்புகளில் திராவிட அரசியல்வாதிகள் நடத்திவரும் வன்முறைகளை விளக்கும்படியாக படம் முழுக்க விளக்குகிறது ரஞ்சித்தின் "மெட்ராஸ்". சுவர் அரசியலை வெளிப்படுத்தும் இப்படம், பல்வேறு அரசியல் சமூக ஒடுக்குமுறைகளையும் அதிகாரக் குவிப்புகளையும் யதார்த்தமாகவே காட்டுகிறது. "இந்த சுவத்துலதான் எங்க தாத்தா இருக்காரு", என ஒருவர் சொல்லும்போது, "உங்க ஆயா என்ன பக்கத்தூட்டு செவுத்தில இருக்காங்களா?" என பரிகாசம் செய்யும் கதாநாயகன் கார்த்தி, " ஜாதி ஒழிப்பை உள்நிறுத்தாத தமிழ்-தேசிய அரசியலை வெளிப்படையாக சாடுகிறார். "இங்கு இருக்கிரனவங்க தமிழ் தமிழ்னு பேசுறானுங்க; ஜாதி-மதம்னா கத்திய தூக்கினு நிக்கிறானுங்க," என உரக்கச் சொல்வது சில பல மொழி-தேசிய அரசியல்வாதிகளுக்கு வெடிவைக்கிறது. சுவர் அரசியலை முடிவுக்கு கொண்டுவர, "கற்பி" எனும் கல்வி விழிப்புணர்வை விளக்கி வன்முறை ஆயுதங்களுக்கு மாற்று என்னவோ அறிவாயுதம் ஒன்றே எனும் இந்திய அரசமைப்புத் தந்தை அண்ணல் அம்பேத்கரின் பின்னணி படத்துடன் சிறார்களுக்கு மாலை நேர படிப்பகங்களை உருவாக்கும் இந்த தலைமுறையை முன்னிறுத்தும் கதாநாயகன், "இனி படிக்கலாமா?" என பகுத்தறிவுடன் கூடிய அரசியல் விழிப்புணர்வை பெறுங்கள்' என அழைப்பு விடுப்பது பாராட்டுக்குரியது!
பாத்திரத்தோடு இணைந்து பயணிக்கும் கதாநாயகன் கார்த்தியின் நடிப்பு பாராட்டுக்குரியது. வழக்கமாக வரும் கற்பனைக்கு எட்டாத "பஞ்ச் வசனம்" பேசி ஹீரோவை கடவுளாக காட்டும் டுபாகுறு மேதமைகள் எதுவும் இல்லாத கார்த்தியின் நடிப்பு நெஞ்சில் நிற்கிறது. வழக்கமாக உடலை குலுக்கி நடனம் ஆடும் அதீத-அரிதாரம் ஏதும் பூசாத சமூக விடுதலையோடு பெண்விடுதலையும் பேசும் பெண்ணாக கதாநாயகி கேதரீனா தனது எளிய நடிப்பில் தமிழ் சினிமாவுக்கு புதியதொரு தோற்றுமையை தருகிறார். கேதரீனாவுடன் வரும் கார்த்தியின் காதல் காட்சிகள் யதார்த்தமான இருக்கிறது. காதலும் நட்பும் போட்டிபோட்டு நடிக்கும் இப்படத்தில், கலகலப்புக்கும் கலாய்ப்புக்கும் குறையில்லாத கார்த்தி "கையிக்குத்தான் எட்டித்தான்...வாயிக்குதான் எட்டல" காட்சி அமைப்பும் யதார்த்தங்களின் ஊடே மற்ற பாத்திரங்களோடேயும் பயணிக்க வேண்டிய வளர்ந்த கதாநாயகர்களுக்கு ஒரு புதிய கலைவடிவமாக இருக்கிறது எனலாம். காதலில் தோற்பது ஒரு சாதாரண நிகழ்வு; அதிலிருந்து வெளிவர நட்பு வட்டத்தில் நடக்கும் கிண்டலும் கேலியும் மன அழுத்தங்களை உடைக்கிறது என்பதை தொடர்ந்து இந்த படத்திலும் விளக்கி இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.
ஹீரோவை மட்டுமே மையமாகக் கொண்டு நகரும் இந்திய சினிமாவை மாற்றும் வகையில், இனி மக்களை மையப்படுத்தும் "மெட்ராஸ்" போன்ற திரைப்படம் கார்த்தியின் அடுத்த நகர்வாக இருக்கிறது. சந்தோஷின் மெல்லிய இசை இவர்களின் நுணுக்கமான காதல் இணைகளுக்கு இடையே இயற்கையாகவே வெளிப்படும் சுயமரியாதையை விளக்கும்படியாக உள்ளது. நண்பனாக வரும் "அன்பு" மற்றும் மேரி, மற்றுமுள்ள துணைப்பாத்திரங்கள் இணைப்பாத்திரங்களாகவே அமைத்திருப்பது, சில மாதங்கள் நாமே இவர்களுடன் வாழ்ந்து நம் கண்முன் நடக்கும் நிகழ்வாக ஒவ்வொரு காட்சிகளும் அமைந்திருக்கின்றன.
விடுதலைச் சிந்தனையின் விசால வெளியெங்கும் சிறகை விரிக்கும் பறவைகள் முட்களைக்கூட தமது கூடுகளாகக் கட்டிக்கொள்ளும் எனும் உமா தேவியின் அற்புதச் சிந்தனை "தாய்" புகழ் மக்சிம் கார்க்கி போன்ற உன்னத புரட்சியாளர்களின் எழுத்தை நினைவுக்கு கொண்டுவருகின்றன. "உயிர்வாழ முள் கூட ஒரு பறவையின் வீடே மாறிடுமே / உயிரே உன் பாதை மலராகும்" என நண்பனை இழந்த காதலனுக்கு எழுதப்படும் பாட்டு தமிழ் திரை இலக்கியத்தில் ஒரு புதிய தோற்றுமை! "அனல் காயும் பறையோசை ஓர் வாழ்வின் கீதம் ஆகிடுமே!" எனும் வரிகளும் ஒரு பெண்ணின் காதல் ஆணின் வலியோடு முடங்கிவிடாமல், தொல்லிசையின் நுணுக்கத்தையும் பண்பாட்டின் அடையாளத்தையும் மீட்கும் வலிமையையும் வெளிக்கொணர்கிறது இப்பாடல்!
வண்ணங்களில் நீலம் மானுடத்தின் தீரா அறம், அறிவு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் போதி விருட்சத்தின் வெளிப்பாடு. திசைகளற்ற விரிந்து பரந்த வான் வெளியின் முடிவுறா வண்ணம்! அன்புக்கருணை, உண்மைநட்பு, ஞானப்பெருக்கு, தானச்செருக்கு என நீள்கிறது நீல வண்ணத்தின் அழகியல்! கதாநாயகனும், மற்ற நண்பர்களும் ஏறக்குறைய எல்லாக் காட்சிகளிலும் நீல ஆடை உடுத்தி வருவது பா. ரஞ்சித்தின் தீரா அறத்தின் நீளம். கதாநாயகியின் தந்தை படிக்கும் நூலாக இருந்தாலும் நீல வண்ணம் பெரும் அடையாளமாக இருக்கிறது. தனது காதல் கணவன் அரசியல் சூழ்ச்சியால் கொல்லப்பட்டப்பின் வெள்ளையாடை உடுத்தும் பெண்ணடிமை மரபை உடைத்து, மேரி உடுத்தும் புடவை நீல வண்ணமாக இருப்பது பெண்ணியத்தின் வெளி. இறுதி கட்டத்தின் உச்சமாக சுவரில் வரையப்பட்டிருக்கும் முன்னாள் அரசியல் தலைவரின் வரைபடத்தின் மீது நீலச் சாயத்தை வீசி, நீலப்புரட்சி செய்யும் இயக்குனர் ரஞ்சித்தின் மகா தைரியத்தை பாராட்ட வேண்டும்! தணிக்கையாளர் கண்களை உறுத்திய நீல வண்ணம், எத்தனை அரசியல்வாதிகளை உலுக்காமல் விடுமா என்ன?
"மெட்ராஸ்" திரைப்படம் இதுவரை திரையில் காட்டப்படாத ஒரு அரசியல் விமிரிசனம். இடைவெளி இல்லாமல் ரெண்டரை மணிநேரம் காதல் வலியையும், மகிழ்ச்சியையும், நட்பின் பெருமையையும், மக்களின் எளிமையையும், அடையாள மற்றும் அதிகார அரசியலின் உரிமையை உரக்கப்பேசும் கலகக் குரல்! திராவிடம் விழுங்கிய துரோகம் செய்யும் "அடிமைகள் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்; நமக்கு அரசியல்தான் முக்கியம்!" என தனது சுட்டுவிரலை நீட்டும் ஜானியை உருவாக்கிய இயக்குனருக்கு மீண்டும் வாழ்த்துக்கள்! அமெரிக்காவின் 39 திரை அரங்குகள் உட்பட, பல வெளி நாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் "மெட்ராஸ்", நூற்றுக்கணகிலான இந்திய திரை அரங்குகளிலும் பெரும் ஆதரவைப் பெற்றிருப்பது எதிர்பார்த்த வெற்றிதான் என்றால் மிகையில்லை!
--சாக்ய மோஹன்--