Hell of caste in Hinduism

Hell of caste in Hinduism
Savi Savarkar's painting on caste monsters

Tuesday, April 10, 2012

எல்லைகளற்ற இசை வெளி எம் இளையராஜா! எம் பறை இசையில் அதிர்ந்து விடிந்தது கீழைய இசை உலகம்!

எல்லைகளற்ற இசை வெளி எம் இளையராஜா!
எம் பறை இசையில் அதிர்ந்து விடிந்தது கீழைய இசை உலகம்!

(உடலும் உயிருமாய் இணைந்தே வாழ்ந்த இசைஞானியின் இணைவியார் பிரிவுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்!)

-சாக்ய மோஹன்-

தமிழர் எனும் பொய்த்திரையில் ஒளிந்துகொண்டு சூத்திர ஜாதித் தரகு பேசுவதை நிறுத்துவதில்லை இந்த ஜாதி மூர்க்கர்கள்!  இளையராஜா ஒரு பார்ப்பனவாதி என்ற தேய்ந்து போன இசைத்தட்டாக உறுமுவர் இந்த 'பார்ப்பனரல்லாதோர்' வழி அறிவர்கள்!  ஜாதியற்ற ஒரு தலித் குடியில் பிறப்பெடுத்தவன் இசை உலகில் எல்லையற்று வளர்ந்திருப்பதை ஏற்பது என்பது ஜாதியில் நம்பிக்கை உள்ளவர்க்கு கடினம் தான்!

எத்தனை கதாநாயகன்களை இயக்கி ஓங்கி வளரச் செய்தது இந்த பண்ணையபுரத்து பண்ணிசை!  சூப்பர் ஸ்டார்களும், உலகநாயகன்களும், இளைய தளபதிகளும், கேப்டன்களும், குட்டி-எம்ஜியார்களும் மற்றும் எண்ணற்ற கதாநாயகர்களும் கதாநாயகிகளும் ஓங்கி வளர்ந்த கதை இசைராஜன் இளையராஜாவின் இணையற்ற இசை முதலீட்டால் மட்டுமே என்றால் மிகைஇல்லை.  பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்தினம் முதல் மிஷ்கின், பிரகாஷ்ராஜ் வரையிலான எண்ணற்ற இயக்குனர்களை உருவாக்கியது இந்த பறையிசை வழி ஏகிய இசைராஜனின் இசை ஆற்றல் என்றால் மறுப்போர் உண்டோ? தன் முதல் குழந்தை பிரசவத்தோடு சினிமா உலகில் பிரசவம் கண்ட கவிப்பேரரசு வைரமுத்துவின் வார்த்தைகள் உயிர்கொண்டது எங்கே? இந்த இளையராஜாவின் இசைக் கூட்டில் தானே!  

உலகத்திலேயே அதிக பாடல்களை இசைக் கூட்டிய உன்னத இசையின் ஆயிரம் முகமுடைய இசைராஜன் எம் இளையராஜா!  தன் இருப்பை இசை வழி மட்டுமே வெளிப்படுத்திய ராஜகுயில் ராஜா!  வேஷ-பிராமணர் விளித்த சனாதனத்தின் அடியொற்றி எழுந்த கர்நாடக இசை முகத்தை காட்ட இசைப் பேரொளியாய் ஒளிர்ந்த இசைப்பகலவன்!  சேரியின் ஜாதிய எல்லைகளை தனது பறை 'தருவு'களால் கடந்து எல்லையற்ற இசைவெளியை உலகுக்கு வழங்கிய இசை போதி எம் இளையராஜா! சூத்திரர் எத்தனை வெற்றுப்-பார்ப்பன எதிர்ப்பு கிளப்பினாலும், அடங்க மறுத்து வெளியேறுகிறது இந்த ஜாதியற்றவனின் மூச்சுக் காற்று எண்ணற்ற இசை வடிவங்களாய்!  வெட்கம் கெட்டவர்கள் ஜாதி ஹிந்துக்கள்! இந்த இசைஞானியின் கீதங்களை மட்டும் கோவிலுக்கு உள்ளே இசைக்கவிட்டு, இவரை மட்டும் கோவிலுக்கு வெளியே நிற்க வைப்பர் தரகு சூத்திரரும் பிராமணரும்!  சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என மொழி எல்லைகள் கடந்து வந்த திசையெங்கும் தேனூறும் தெள்ளிய இசையின் தீராநதி இளையராஜா! இசையில் வெல்லமுடியாதவர் எனப் போற்றப்படும் தியாகராஜரையும், தீக்ஷிதரையும் தாண்டிஎங்கோ கடந்து செல்லும் நெடுதூர இசைப்பயணி எம் இளையராஜா! 

"இதயம் ஒரு கோவில்" இளையராஜா எழுதி இசையமைத்து பாடிய பாடல் அனைவரையும் பிரமிக்க வைத்தது. 1983 ஆம் ஆண்டில் இந்த பாடல் வெளியானவுடன், பாடுவதில் வல்ல எனது நண்பன் பி.சி.வி.ராஜா இந்த பாடலுக்கான இசைமெட்டுக்கு என்னை பாடல் எழுத தூண்டியபோது, ஒரு இசை வேந்தனான இளைய ராஜாவை மனதில் நிறுத்தி நான் எழுதிய பாடல் கீழ் வருமாறு:

மனதில் இசை தேவி
அடி நீ தான் எந்தன் ஆவி
இனி நாளும் இன்பமே
இசையின் அமுதில் உன்னை காண்கிறேன் (மனதில்...)

அலைகள் வளரும் கடலைப் போல்
கவிதை மலரும் மனங்களே!
இசையை அருந்தும் பறவை நான்
இனிய கனவில் வாழ்கிறேன்!
அசையும் உலகில் இசையை கேட்க
எதுவும் இசையுமே! 
அசையும் உலகில் இசையை கேட்க
எதுவும் இசையுமே! 
பாடலில் வரும் சந்தம்
மனதில் எழும் பந்தம்
ஜாதியும் இல்லை இங்கே
சரிசமம் அது எங்கே?
இருண்ட உலகம் விடியவே
நாளும் பாடுவோம்!  (மனதில்...)

வயலின் வெளியில் உழைத்திடும்
வறிய ஜனங்கள் பாடலை
முதுகும் வெயிலில் காய்ந்திட
முனகும் மனதின் பாடலை
இசையைப் பெருக்கி அசைவைக் கூட்டி
நாளும் பாடுவோம்!
கலங்கும் மனித இனங்கள் காக்க
கவிதை பாடுவோம்!
இனி தான் இசை தேவி
விடியல் பெரும் வையம்!
அடடா எது நீதி?
அனைவரும் சரி பாதி!
இருண்ட உலகம் விடியவே
நாளும் பாடுவோம்!  (மனதில்...)

உயிர் இல்லாமல் உடல்களும்
உலகில் வாழ முடியுமா?
இசை இல்லாத வாழ்விலே
இனிமை காண முடியுமா?
பழமை மடமை ஒழிந்து இசையும்
புகழ்பெற வருமோ?
அழுது மாளும் ஜனங்கள் இனியும்
நிமிர்ந்து வாழுமோ?
அடடா கொடும் தீது!
மனிதன் படும் பாடு!
ஆஹா புது வீணை!
விரலால் கொஞ்சம் தீண்டு!
இருண்ட உலகம் விடியவே
நாளும் பாடுவோம்!  (மனதில்...)  


மீண்டும் வா எம்மை மீட்டுருவாக்கம் செய்ய!

மீண்டும் வா எம்மை மீட்டுருவாக்கம் செய்ய!
(For Dr. Poovai Murthiyar)

-சாக்ய மோஹன்-

போதியின் கிளை பரப்பிய
சாக்கியத்தின் வேர்கால் விருட்சம்!

போதிசத்துவர் அம்பேத்கரின்
விடுதலைக் கனல் நெருப்பு !

ஆதிக்க ஜாதியரின்
வாலறுத்த வாள்வீச்சு !

அம்பேத்கர் என்னும் கருணாமூர்த்தியின்
கனல் மூர்த்தி நீ!

வட மாவட்டங்களில் சூத்திர மிருக பயம் போக்கிய
தலித் குடிகளின் காவல் தெய்வம் நீ!

தமிழரின் சூத்திர திமிர் அடக்கிய
தலைமகனே!
தமிழர் முடக்கிய
தீண்டா சேரிகளின் வரைபடத்தை
சுருட்டி வைத்து
சூத்திரரின் தீண்டாமை எல்லைகளை கடக்க
உனது சுட்டு விரலே துப்பாக்கியாய்
உன்னோடு நாம் நடந்த காலம் பொற்காலம் தான்!

தலித் குடியிருப்புகள் இனி
தமிழரின் சேரிகள் இல்லை என 
அம்பேத்கர் நகர்களாக பெயர் மாற்றம் செய்தாய்!
ஆனால், இன்று அம்பேத்கர் நகரங்கள்
மீண்டும் தமிழர்களின் தீண்டா சேரிகளாக
கோரைப்பல் கொலைப்பாதக
புலிகளின் கூடாரமாக மாறுவதோ?

மீண்டும் வா அதே நெருப்புச் சிந்தனையாய்!
எம்மை மீட்டு விடுவி
இந்த சொத்தை மொழிதேசிய
கூகைக் குகையிலிருந்து!