Hell of caste in Hinduism

Hell of caste in Hinduism
Savi Savarkar's painting on caste monsters

Friday, May 25, 2012

தாசரிசம் தமிழ் தேசியமல்ல! சாக்கயரின் புத்த தன்ம தத்துவம்!


பண்டிதர் குறித்த கட்டுரை முழுக்க முழுக்க அவரைக் குறித்த தவறான தமிழ்தேசியவாதிகளின் கருத்தாக பதிவாக காட்டி இருப்பது பெரும் முரணே.  சூத்திரர் பத்திரிக்கையான "விடுதலை"யில் பண்டிதர் குறித்த அவதூறு கட்டுரைக்கு பதிலாக அமைய வேண்டிய கட்டுரை,  "தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்த் தேசியம் என்ற ஒருமையைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதியில் முதன்முதலாய் தன்னந் தனியராய் வடித்து வார்த்தெடுத்தவர்", என்றெல்லாம் எழுதி பண்டிதரை ஒரு சிறு மொழி வட்டத்துக்குள் முடக்கிவிட முயற்சியாகவே இருக்கிறது. 

நிச்சயமாக நீங்கள் குறிப்பிடும் "தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்த் தேசியம் என்ற ஒருமையை", எந்த கட்டத்திலும் பண்டிதர் முன் வைக்கவில்லை.  தமிழ் தேசியம் குறித்த லட்சியம் ஏதும் போதிசத்துவர் நிலை அடைந்த பண்டிதர் அயோத்திதாசருக்கு இருந்ததாக ஒரு ஆதாரமும் இல்லை.  நீங்கள் ஒரு தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நபராகவே உங்கள் கட்டுரையை புனைந்துள்ளீர் என்பதும், தமிழ் தேசியம் பேசும் தலித் கட்சிகள் சிலவற்றை மனதில் நிறுத்தி எழுதி இருப்பதாகவும் உங்கள் சிறு கட்டுரை அமைந்திருக்கிறது.  கீழ்வரும் பண்டிதர் மீதான உங்கள் பார்வை மிக அபத்தமானது.  பண்டிதரின் புத்த-தம்ம சிந்தனைக்கு தீயிடும் ஆபத்தானது:

"மொழிவழி தேசிய வகைப்படுத்தலான அறிவுபூர்வ முறையைத் தற்காலத்திய தமிழர்கள் பெற்றிருப்பதற்கு அவருடைய எழுத்தும்,     சிந்தனையும், களப்பணியிலிருந்த கவனம் நிரம்பிய பற்றுறுதி கொண்ட எதிர்காலத் திட்டங்களும் தொலைநோக்குப் பார்வையுமே காரணம்.  தமிழன் என்பதற்குப் பறையனொழிந்த பிற சாதிகள்�என்று திட்டமிட்டுக் கள்ளத்தனமான கருத்தியலாளர்கள் இன ஒருமையைப் பிளவு படுத்தியிருந்த போது தமது ஆய்வினூடாகவே அப்பூடக சதிகளை முறியடித்தார்."

பண்டிதர் குறிப்பிடும் "தமிழன் என்பதற்கு 'பறையனொழிந்த பிற ஜாதிகள்' என்று முக்கிய ஆங்கிலப் பதிவுகளிலும், சென்னை பலகலை கழக வெளியீடுகளிலும் பதிவாகி இருப்பது சரிதானே?  பறையர்கள் தமிழர்களா? தமிழ் பேசுவதனால் பறையர்கள் தமிழர்களா? மராட்டி பேசிய பாபாசாஹெப் அம்பேத்கர் மராட்டியன் இல்லாதபோது, தமிழ் பேசி தமிழில் புலமை பெற்ற காரணத்தினால், பண்டிதர் அயோத்திதாசர் தமிழரா? அடிப்படையில் ஹிந்து மதத்தை அடிப்படையாக கொண்டு எழுந்த ஜாதிகளே தமிழர்கள்.  "பறையர் வேறு; தமிழர் வேறு", என ஆனந்தரங்க பிள்ளை கூறுவது நிஜமாகும் முன்பு, எனது தந்தை என்னிடம் அடிக்கடி கூறுவார், "தம்பி தமிழ்லனை நம்பாதே! அவனுங்க எல்லாம் சூத்திர புத்திய காட்டிடிவானுங்க", என்பார்.  அப்போதுதான் எனக்கு புரிந்தது பறையர்கள் தமிழர் அல்ல என்று.  அதன் பிறகு பல வரலாற்று செய்திகள் என்னைப் போன்ற எத்தனையோ ஜாதியற்ற பறையர்களை விழிப்படைய வைத்தது. 

பண்டிதர் எந்த காலத்திலும் தம்மை தமிழர் என அடையாளப் படுத்திக்கொள்ள முனைந்ததில்லை. மாறாக, பறையன் என்பவன் இழிந்தவன் என்னும் தமிழ் ஜாதிகளின் கட்டுக் கதையை போட்டு உடைக்கிறார் பல்மொழி வித்தகரான பண்டிதர்.  பறையர்களின் ஆதி மொழியாக பாலியை மட்டுமே காட்டுகிறார்.  தம்மம் வளர்க்க புத்த அறிவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட மொழியாகவே தமிழை காட்டுகிறார்.  பாலி மொழியிலிருந்து எவ்வாறு தமிழை உருவாக்கினர் என வீரசோழியம், சூளாமணி, மணிமேகலை என நீள்கிறது பண்டிதரின் வரலாற்றுப் பார்வை.  தம்மை சாக்கிய குல மக்களாகவே காட்டுகிறாரே ஒழிய எந்த காலத்திலும் தமிழர் என அவர் முன்மொழியவில்லை.  போதி விருட்சம் தந்த தம்மத்தின் அடியொற்றி நிற்கும் ஹீன-தேர சாக்கைய குடிகள் தம்மத்தை பறைந்ததால் பறையர் என அழைக்கப்பட்டனர் எனும் சொல்லறிவியலில் தலித் குடிகளை தீண்டாமை தீதிலிருந்து விடுவிக்கிறார்.  பள்ளர் மற்றும் சக்கிலியரை சாக்கைய குடிகளாக அடையாளப் படுத்த அவர் முனைந்ததாக தெரியவில்லை என்றாலும், பறையர் எனும் சொல்லாடலை தீண்டாமை இழிவிலிருந்த விடுவித்து எண்ணற்ற ஆதாரங்களுடன் பறையர்கள் புத்தரின் தன்ம-கன்ம செய்திகளை பரப்ப எழுந்த சாக்கயரே எனும் வரலாற்று மீட்சியை தமிழ் தேசியத்திற்குள் புதைக்க வேண்டாம்.  பாலியோ, சமஸ்கிருதமோ, தமிழோ எல்லாம் புத்த தன்மம் பரவவே என்கிறார். 

தமிழ் சமூகம் ஜாதியை அடியொற்றி கட்டப்பட்ட ஹிந்துயிசத்தை வேர்க்கொண்டதே.  இதை பண்டிதர் முறியடிக்க முனைததில்லை. மாறாக, தமிழ் பேசும் தலித் குடிகளின் புத்த சமயத்தின் மூல ஆதாரங்களை வெளிக்கொணர தம் வாழ்நாள் முழுதும் போராடினார் என்பதே உண்மை.  தமிழ் மொழி வளர பண்டிதர் எழுதவில்லை; மாறாக, தன்மம் வளர பரவ ஜாதி ஒழிய தீண்டாமை ஒழிய மட்டுமே அவர் தமது எழுத்தை பயன்படுத்தி இருக்கிறார் என்பதே மெய்.  தமிழ் தேசியத்தை தலையில் வைத்து அரசியல் கூத்தாடி அண்ணல் அம்பேத்கரின் புத்த நெறிகளை புறக்கணிக்கும் சில தலித் கட்சிகள் போன்று வளரும் இளைய தலித் அறிவர்கள் மொழியின சாக்கடையில் புறந்தள்ளப்படுவது ஊழ் தானோ?

சேரி மக்கள் மொழி தமிழ் என்றும், சேரியில் மட்டுமே தமிழ் வாழ்கிறது என்றும் செவ்வியல் நா உருகப் பேசி கவர்ச்சி அரசியல் நடத்தி சேரி சமூக மாணவர்கள் தமிழைத்தவிர மற்ற மொழிகளை கற்றுத் தேறாத நிலையில், பல அரிய வாய்ப்புகளை இழந்து பலவீனமாகி வருகிறது இன்றைய-நாளைய சேரி சமூகம்.
 
வரலாறு அறியாது தலித் தலைமைகள் நடத்தும் தமிழ்-தேசிய அரசியல் இதோ இன்றைக்கு சூத்திர (தமிழர்) ஜாதிகள் கைப்பற்றிவிட்டனர்.  ஜாதி மலிந்த தமிழ் சமூகத்தில் மொழி-இன அரசியல் சூட்சுமங்கள் ஜாதியற்ற தலித் குடிகளுக்கு குறிப்பாக புத்த குடிகளான பறையர்களுக்கு ஒத்து வராது.  உங்களின் வரலாற்றுப் பிழைக்கு பிரமாண்டமான மேதையை பண்டிதரை பலி வாங்காதீர்கள்!  தாசரிசம் என நாம் கடினப்பட்டு வெளிக்கொண்டுவந்தது இற்றுப் போகும் தமிழ்-தேசியம் அல்ல; தாசரிசம் சாக்கைய பெருங்குடிகளின் தன்ம தத்துவமே என்பதை அறிக!