இசை ராஜனே!
--சாக்ய மோஹன்--
தப்புப் பறைஇசை
நாடி நரம்பில் வெறியேற முழங்க
திசையெலாம் அலறும்!
சாப்பறை என
சரிந்த எமது பறை
நீ வாசித்தபோதுதான்
நரம்பிசை வாத்தியங்களையும் இயக் கியது!
இந்த தமிழ் சினிமாவையும்
இயக்கச் சொல்லிக்கொடுத்தது!
தமிழிசை தெலுங்கிசை கர்நாடக இசை என
மொழி-இன-ஜாதியில்
கோவில் தூண்களில் செதுக்கிய அடிமையாய்
மூர்க்கமாய் விலங்கிடப்பட்ட இசை
உனது விரல் லாவகத்தால் தான்
எல்லோர்க்கும் அவிழ்ந்தது!
மேல் திசை ஏகி
கீழ் திசைப் பெயரும்
உனது இசைப் பறவைகள்
சேரியிலிருந்து குடிபெயர்ந்து
தீண்டா தேசத்தின் எல்லா அங்குலங்களிலும்
உனது பெயரில் தான்
உயிர் உருக இசைத்தன!
உனது இசை தெய்வத்திற்கு
நீ பதித்த முத்து வைர மணி எல்லாம்
கொட்டி போயிற்று
ஆனால் நீ மட்டும் இன்னும்
உனது இசைப் பாதையில்
நெடுதூரப் பயணியாய்
நித்திய ஸ்வரங்களுடன்!
மொழியிலும் மொழிவழி ஜாதியிலும்
ஜாதிவழி மதத்திலும் கவ்விக்கொண்டு
கட்டுண்டு கிடந்த இந்திய இசையை
உனது ஒற்றைக் கட்டை ஸ்ருதியில்
மீட்டெடுத்தாய் மக்கள் இசையாய்!
உன்னை எழுத
நான் மஹா கவியில்லை எனினும்
அநித்திய பொருள் சுமக்கும்
அட்சரங்கள் சுமக்கும்
சிலபல சொற்களுக்குள்
உன்னை அடைக்க முயன்றேன்!
இன்றும்,
சனாதனத்தின் புரையோடிய
ஜாதிக் காதுகளை கிழித்துக்கொண்டு
கோவிலுக்கு உள்ளே
உனது கீதங்கள் ஒலித்தாலும்,
எமது இசைராஜனே! நீ மட்டும்
இன்னும் கோவிலுக்கு வெளியே!
உணர்ந்தால் உனக்கும் விடுதலை!
No comments:
Post a Comment