Hell of caste in Hinduism

Hell of caste in Hinduism
Savi Savarkar's painting on caste monsters

Wednesday, March 7, 2012

தீண்டாமை வந்த கதை

-சாக்ய மோஹன்-

தமிழில் "தீண்டாமை" குறித்து முதல் கல்வெட்டு செய்தி புத்தசேரியாம் புதுச்சேரியில் உள்ள பாகூர் நகர சிவன்கோவில் மேற்குச் சுவற்றில் "தீண்டாச்சேரி" என்ற சொல்லோடு நாம் அறிய முடிகிறது. இது பத்தாம் நூற்றாண்டின் கல்வேட்டேயாகும். இதுவே தீண்டாமை குறித்த முதல் செய்தியாக தென்னிந்திய கல்வெட்டு ஆய்வு வெளியீடுகள் தெரிவிக்கின்றன. தொண்டைமண்டலம் பகுதிக்கு உட்பட்ட புத்தசேரி அதாவது இன்றைய புதுச்சேரி புத்த ஆட்சியாளர்களான களப்பறையர் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையிலும் ஜாதியை அடியொற்றி கட்டப்பட்ட பிற்கால சோழ ஆட்சியின் துவக்கத்திலும் தான் தீண்டாமை எனும் தீது அன்றைய சாக்கையர் குடிகளாம் சாக்ய-சமண-ஹீன-தேரப் பறையர் மீது திணிக்கப்பட்டதை நாம் அறிகிறோம்.

அன்றி தென்னிந்திய பகுதியைப் பொறுத்த வரையில், கி.பி. ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில் ஜாதித் தீண்டாமை பரவியது என்பது கேள்விக்குரியதே. ஜாதித் தீண்டாமை குறித்த வரலாற்றை இட்டுக்கட்டிகொள்ள செய்யப்பட்ட ஏற்பாடாகவே இதை நாம் பார்க்கமுடியும். மணிமேகலை முதல் பதினெண் கீழ்கணக்கு நூல்கள் யாவும் இன்றைய தீண்டாதார் எனப்படும் சாக்ய குடிகளே எழுதியுள்ளதை வைத்துப் பார்த்தோமேயானால், வீரசோழியம் எழுதியதும் சாக்ய குடியான புத்தமித்திரனே என்றும் பார்த்தோமேயானால், தீண்டாமைக்குள் ஒடுக்கப்பட்டவர் மிகப்பெரும் அறிவர் சமூகமாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவே. இதன் மூலம், தீண்டாதார் என்போர் தீண்டப்படாதாராக ஒடுக்கப்படுவது புத்த சமயம் வீழ்ச்சி அடைந்தபின் தான் நடந்திருக்க முடியும். சாக்ய அறிவரால் இயற்றப்பட்ட "வீரசோழியம்" எழுதப்பட்டது கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கணியனும், சீத்தலை சாத்தனும், வள்ளுவனும், அம்பிகை அம்மன் அவ்வையும் இன்னபிற எண்ணற்ற கவி மேதைகளும் அறிவர்களும் சாக்கையர் குடிகளே எனில் "பஞ்சமாப்பாதகங்களை தீண்டாதார்" எப்படி எப்போது எதனால் யாரால் தீண்டப்படாதார் என ஒடுக்கப்பட்டனர் என்பதை அறிந்துகொள்ள தமிழரின் "ஏழாம்" அறிவு ஏதும் தேவை இல்லை என நினைக்கிறேன்!

No comments:

Post a Comment