செந்தமிழ் பைந்தமிழ் தீந்தமிழ் தேனென
சிந்துவர் காதினில் சீர்மிகு சொற்களில்
சந்தடி தெருவெலாம் வாரி இரைப்பர்
குந்தடி இடமெலாம் தமிழாய் சொரிவர்
சிந்திய செருப்பினை மாட்டிச் சிரிப்பர்
வந்தனை சொல்லை வணக்கம் எனச்சொலா
சிந்தனை செல்வர் "ஜெய் பீம்" என்றால்
வந்திடும் கோபம் தமிழர் ஜாதியர்க்கு
உன்தமிழ் ஜாதிகள் உன்வேரருக்க
வன்தமிழ் சூத்திரர் உன்வீ டெரிக்க
என்தமிழ் சொந்தமென எங்களை அழைக்கும்
உன்தமிழ் அரசியல் உன்னோடு சாகட்டும்
செந்தமிழ் பேசினும் சேரியில் உள்ளோர்
மந்தையில் முனகிடும் செம்மறி அல்லவே!
குந்தமிழ் தலைவரின் பாதம் வீழ்வோய்!
கந்தை கட்டினும் கருவம் கொண்டு
எந்தை அம்பேட்கர் எய்திய வழியில்
நந்தனை எரித்த கழுவினில்
நசுங்கிடும் தமிழடிமை யாமில்லை அறிவாய்!
No comments:
Post a Comment