dalit abroad தலித் வெளி
Voice of the World of Oppressed
Hell of caste in Hinduism
Sunday, November 27, 2016
யாமல்ல ஜாதிய தமிழரடிமை!
செந்தமிழ் பைந்தமிழ் தீந்தமிழ் தேனென
சிந்துவர் காதினில் சீர்மிகு சொற்களில்
சந்தடி தெருவெலாம் வாரி இரைப்பர்
குந்தடி இடமெலாம் தமிழாய் சொரிவர்
சிந்திய செருப்பினை மாட்டிச் சிரிப்பர்
வந்தனை சொல்லை வணக்கம் எனச்சொலா
சிந்தனை செல்வர் "ஜெய் பீம்" என்றால்
வந்திடும் கோபம் தமிழர் ஜாதியர்க்கு
உன்தமிழ் ஜாதிகள் உன்வேரருக்க
வன்தமிழ் சூத்திரர் உன்வீ டெரிக்க
என்தமிழ் சொந்தமென எங்களை அழைக்கும்
உன்தமிழ் அரசியல் உன்னோடு சாகட்டும்
செந்தமிழ் பேசினும் சேரியில் உள்ளோர்
மந்தையில் முனகிடும் செம்மறி அல்லவே!
குந்தமிழ் தலைவரின் பாதம் வீழ்வோய்!
கந்தை கட்டினும் கருவம் கொண்டு
எந்தை அம்பேட்கர் எய்திய வழியில்
நந்தனை எரித்த கழுவினில்
நசுங்கிடும் தமிழடிமை யாமில்லை அறிவாய்!Monday, November 24, 2014
ஜாதி ஒழிப்பில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் இடம் பெறாதது ஏனோ?
--சாக்ய மோஹன்--
"தி ஹிந்து" பத்திரிகையில் பேராசிரியர் ரணஜித் குஹாவின் ஜாதி ஒழிப்பில் காந்தி-அம்பேத்கர் குறித்து வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு வாசகர், //"இவரு ஏன் பெரியாரை விட்டுட்டாரு? அவரு சாதி ஒழிப்பு செய்யலையா? ஒருவேளை தலித் விடுதலைக்க் அவர் வேலை செய்யலையா? ..இவரு என்ன ஆராய்சியாளறு?"// என கேள்வி கேட்டிருக்கிறார். இவருக்கும் பல ராமசாமியவாதிகளுக்கும் நமது பதிலையும் பதிவு செய்யலாம்.
"பெரியார்" என பட்டம் கொடுத்ததே அன்னை மீனாம்பாள் எனும் தலித் தலைவர்தான். அதுவரை அவர் "ராமசாமி நாயக்கர்" என்றுதான் அழைக்கப்பட்டார். ஜாதி ஒழிப்பில் வெறும் பிராமணர்-எதிர்ப்பை மட்டுமே முன்னிறுத்தி "சூத்திரர்" எனும் கீழிறக்கப்பட்ட இழி-ஜாதிக்காக மட்டுமே போராடியவர் என்பதால் ஜாதியத்தின் ஆணிவேரான பிராமணியத்தை எதிர்க்காமல் 'சூத்திரர் சுப்ரீமசி' எனும் "சூத்திரர் மட்டுமே" ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் அரசியலை செய்து அதில் வெற்றி பெற்றனர். சூத்திரரோடு போராடிய ஜாதியற்ற தலித் குடிகளை அதிகார பகிர்வில் சேரவிடாமல் அகற்றிவிட்டனர். இதனால், ஈ.வே.ராமசாமியின் ஜாதி ஒழிப்பு வெறும் பிராமணர் ஒழிப்பும் தலித் குடிகளின் கீழிரக்கமும் தான் நடந்திருக்கிறது. இது ஜோதிராவ் பூலே மற்றும் ஸ்ரீ நாராயணகுரு போன்ற பிற்பட்ட ஜாதி எழுச்சிக்கு போராடிய அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும். அண்ணல் அம்பேத்கர் தனது "ஜாதி அழித்தொழிப்பு" எனும் நூலே ஒட்டுமொத்த ஜாதி ஹிந்துக்களுக்காகவே எழுதினார் எனபது குறிப்பிடத்தக்கது. ஹிந்துஇசம் உள்ளவரை ஜாதி இருக்கும் என ஆய்ந்தறிந்த புத்தரை போலவே அண்ணல் அம்பேத்கரும் மதமாறினார். ஈவேரா ஹிந்துவாகவே இருந்தார்.
அண்ணல் அம்பேத்கர் ஜாதியற்ற ஒரு போதிசத்துவராக இருந்து ஜாதி எனும் மனநல வியாதியை ஜாதி ஹிந்துக்களிடம் இருந்து நீக்க வாழ்நாள் முழுவதும் போராடினார். காந்தியும் ஈவேராவும் ஹிந்துயிசத்துக்குள்ளே இருந்து ஜாதி ஒழிக்காமல் குறிப்பிட்ட ஜாதிகளின் உயர்ச்சிக்காகவும் நடந்திராத ஜாதிய-சமநிலைக்காகவும் போராடினர். ஒரு சூத்திரராக இருந்து ஈவேரா காந்தியை (நான்கு வர்ணாஸ்ரம மனுஸ்மிருதியை) எதிர்த்தார்; அண்ணல் அம்பேத்கரோ ஒரு ஜாதியற்றவராக ஒட்டுமொத்த ஜாதிய கட்டமைப்பை அழித்தொழிக்க காந்தியின் 'ராம ராஜ்ஜியமான" வர்ணாஸ்ரமத்தை எதிர்த்தார். ஈவேரா வர்ணாஸ்ரமத்தை பிரயோகித்த பிராமண-ஷத்திரியரை எதிர்த்தார்; அம்பேத்கரோ தனிமனிதரை எதிர்க்காமல் ஜாதியின் அடிக்கருத்தியலான ஹிந்தத்வத்தையும், மனுஸ்மிருதியையும் ஒழிக்க பாடுபட்டார். அதற்காக இந்திய அரசியல் சாசனத்தையே ஒரு ஜாதி ஒழிப்பு பட்டயமாக நமக்கு தந்திருக்கிறார். இந்திய அரசியல் சாசனம் மனுஸ்மிருதிக்கு முற்றிலும் முரணானது. தீண்டாமை எனும் வன்கொடும் வழக்கம் உருவாக பிராமணரோடு சூத்திரற்கும் பங்கு இருக்கிறது எனபதை தோலுரித்து காட்டியவர் அம்பேத்கர். ஜாதி அழித்தொழிப்பு நூலை வாசித்தால் மட்டுமே தனது உரையில் 'பெரியார்' என அறியப்படும் ராமசாமி நாயக்கரை ஜாதி ஒழிப்பில் பேராசிரியர் ரணஜித் குஹா சேர்க்க வாய்ப்பில்லை என்பது புரியும்.
ஏற்கனவே நாம் கடலளவு இது குறித்து எழுதிவிட்டோம். தேவையானால் மேலும் விவாதிக்கலாம்.
Thursday, October 2, 2014
மெட்ராஸ் - மாநகர மறுவாசிப்பு
மெட்ராஸ் - மாநகர மறுவாசிப்பு
--சாக்ய மோஹன்--
1522 ஆம் ஆண்டில் போர்ச்சுகீசியர் கட்டிய கோட்டைக்கு சான் தோம் என பெயர் வைத்தனர். 1640 ஆண்டுக்குப் பின் "நரி மேடு" என்றும் "பறையர் காலனி" என்றும், "கறுப்பர் நகரம்" என்றும் அழைக்கப்பட்ட நகரம், கிழக்கிந்திய கம்பனியாரால் "மெட்ராஸ்பட்னம்" என வழங்கலாயிற்று. நரிமேட்டை வளப்படுத்தி நகரமாக்கிய பூர்வீகிகளே பறையர் காலனி மற்றும் கறுப்பர் நகரங்களை விரிவாக்கி செயின்ட் ஜார்ஜ் டவுன் விரிவாக்கத்துக்கு வழிவகுத்தனர். இருப்பினும் "வெள்ளையர் நகர விரிவாக்கம்" பூர்வீகிகளை மெல்ல மெல்ல வெளியேற்றி, அவ்விடத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை சிறப்புற கட்டி, கறுப்பர் நகர கடற்பகுதி, நரிமேடு மற்றும் பறையர் காலனி ஆகிய மூன்று பகுதிகளும் சேர்ந்த "மெட்ராஸ்" உருவானது.
காலனிய வரலாற்றில் மெட்ராஸ் மற்றும் வேலூர் பகுதிகளில் இருந்து பிரிடிஷ்-இந்திய படைகளில் "பறையர் பட்டாலியன்" எனும் சேனையை உருவாக்கிய இந்த கறுப்பர் குடிகள், பிரிடிஷ் துரைமார்களின் துபாஷி மற்றும் பட்லர்களாக இருந்தனர் என்பதும் மெட்ராஸ் குடிகளின் அடையாளம். பூர்வீகக் குடிகளை இன்னும் நகரத்தின் உள்நிலப்பகுதிக்கு குடிபெயரவைத்த பிரான்சிஸ் டே வழங்கிய மாநகர திட்டம் பூர்வீகக் குடிகளை புறம்தள்ள நேரிட்டாலும் அம்மக்கள் இன்றும் தமது அடுத்துவரும் பரம்பரைகளோடு மாநகரத்தை விட்டு வெளியேறாமல் பல அரசியல் இடிபாடுகளுக்கு இடையே தமது அடையாளங்களை துறக்காமல் வாழ்கிறார்கள் என்பதுதான் ஞானவேல் ராஜா தயாரித்த "மெட்ராஸ்".
எண்பது ஆண்டுகளாக ஜாதிய, மொழி-இன அடையாளங்களுடன் பயணித்த தமிழ் திரைப்பட உலகம் மெட்ராஸ் என்றாலே அதிரடி, கொலை, கொள்ளை, பயங்கரவாதம் மற்றும் தமிழை கொச்சைப்படுத்தும் 'மெட்ராஸ் பாஷை" என்றெல்லாம் புரட்டுப் பேசி அம்மக்களை இழித்தும், கேலி செய்தும் பிழைப்பு நடத்திய "தமிழ் சினிமா"வுக்கு, தமிழ்-திராவிட செண்டிமெண்ட், ஹிந்துயிச பின்னணியில் கடவுளையும் தன்னையும் தூக்கிப்பிடிக்கும் ஹீரோ-மைய படங்களையே சார்ந்து இயங்கும் நிலையே இதுவரை இருந்துவந்தது. இந்நிலையில், பா. ரஞ்சித்தின் "அட்டகத்தி" திரைப்படம் மெட்ராஸ் புறநகர்வாழ் மக்களின் எளிமையையும், அன்றாட வாழ்வியலையும், காதல் வயப்படும் இளைய சமூகத்தின் நிலையாமையையும் விளக்கும்படியாக இருந்தது. ரஞ்சித்தின் ரெண்டாம் படமான "மெட்ராஸ்" தமிழ் திரை வரலாற்றில் நகரவியல் விளக்கும் அரசியல், சமூக-பொருளாதார விழிப்புணர்வைத் தூண்டும் முதல் முயற்சியாக திரைக்கு வந்திருக்கிறது.
இத்தனை ஆண்டுகளாக மாநகர திராவிட அரசியல் ஒடுக்குமுறைக்கு பலியாகிவந்த மக்களின் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள எழும் கலகக்குரலும், கபிலனின் பாடல் மூலம் விளக்கும், "கவலை கதவை உடைக்கும் கருவியாய் இருப்போம் / இருக்கும் இடத்தில் இருந்து பறவையாய் பறப்போம்" எனும் வாழ்வியல் சிந்தனை விளக்கும் அறிவின் முதிர்ச்சியும், "உழைக்கும் இனமே உலகம் ஜெயித்திடும் ஒருநாள் / விழித்து இருங்கள் விரைவில் வருமே அந்த திருநாள்!" எனும் நம்பிக்கையும், "மெட்ராஸ்" எனும் பேரை அசைக்க முடியாது "இது கறுப்பர் மண்" என்று மாநகரப் பெயரை மாற்றும் திராவிட அரசியலுக்கு எதிர்குரல் கொடுக்கும், "எங்க ஊரு மெட்ராசு அதுக்கு நாங்கதானே அட்ரசு" சொல்லாடல் மூலம் மாநகரத்தின் மீதான உரிமைகோரும் அதிகார மீட்பும், அடையாள வேட்கையும் படம் முழுக்கத் தெரித்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். "ஒன்ஸ் அப்பான டைம், ஜார்ஜ் டவுன்ல...வியாசார்பாடில... அதாம்பா...ரியல் மெட்ராஸ்பா.." என முழங்கும் ஜானி, மாநகர பூர்வீகிகளின் அடையாள அரசியலின் தூணாக நிற்கிறார். ஜானி பார்வையாளர்க்கு உற்சாகம் தந்தாலும், அரசியல் விமிரிசர்களுக்கு புரிந்திருக்கும் இது மாநகரத்தை ஆட்கொண்ட இடைநிலை ஜாதி-வர்க்க திராவிட அரசியலை உடைக்கும் பெருங்கலகக்குரல் என்று.
காலியாக இருக்கும் பொதுச் சுவர்களில் அரசியல் சின்னம், கட்சித் தலைவர்களின் உருவப்படங்கள், தேர்தல் பிரச்சார வாசகங்கள் வரைவதும், தேர்தல் வரும்போது, சுவர் கிடைக்காத கட்சி பிரமுகர்கள் குறிப்பிட்ட தொகுதிகளில் மக்களிடையே விரோதம் வளர்த்து ரத்தக் களறியாக மாற்றும் "சுவர்" அரசியல் தான் கதையின் மையக்கரு. மாநகர வீட்டுவாரியக் குடியிருப்புகளில் திராவிட அரசியல்வாதிகள் நடத்திவரும் வன்முறைகளை விளக்கும்படியாக படம் முழுக்க விளக்குகிறது ரஞ்சித்தின் "மெட்ராஸ்". சுவர் அரசியலை வெளிப்படுத்தும் இப்படம், பல்வேறு அரசியல் சமூக ஒடுக்குமுறைகளையும் அதிகாரக் குவிப்புகளையும் யதார்த்தமாகவே காட்டுகிறது. "இந்த சுவத்துலதான் எங்க தாத்தா இருக்காரு", என ஒருவர் சொல்லும்போது, "உங்க ஆயா என்ன பக்கத்தூட்டு செவுத்தில இருக்காங்களா?" என பரிகாசம் செய்யும் கதாநாயகன் கார்த்தி, " ஜாதி ஒழிப்பை உள்நிறுத்தாத தமிழ்-தேசிய அரசியலை வெளிப்படையாக சாடுகிறார். "இங்கு இருக்கிரனவங்க தமிழ் தமிழ்னு பேசுறானுங்க; ஜாதி-மதம்னா கத்திய தூக்கினு நிக்கிறானுங்க," என உரக்கச் சொல்வது சில பல மொழி-தேசிய அரசியல்வாதிகளுக்கு வெடிவைக்கிறது. சுவர் அரசியலை முடிவுக்கு கொண்டுவர, "கற்பி" எனும் கல்வி விழிப்புணர்வை விளக்கி வன்முறை ஆயுதங்களுக்கு மாற்று என்னவோ அறிவாயுதம் ஒன்றே எனும் இந்திய அரசமைப்புத் தந்தை அண்ணல் அம்பேத்கரின் பின்னணி படத்துடன் சிறார்களுக்கு மாலை நேர படிப்பகங்களை உருவாக்கும் இந்த தலைமுறையை முன்னிறுத்தும் கதாநாயகன், "இனி படிக்கலாமா?" என பகுத்தறிவுடன் கூடிய அரசியல் விழிப்புணர்வை பெறுங்கள்' என அழைப்பு விடுப்பது பாராட்டுக்குரியது!
பாத்திரத்தோடு இணைந்து பயணிக்கும் கதாநாயகன் கார்த்தியின் நடிப்பு பாராட்டுக்குரியது. வழக்கமாக வரும் கற்பனைக்கு எட்டாத "பஞ்ச் வசனம்" பேசி ஹீரோவை கடவுளாக காட்டும் டுபாகுறு மேதமைகள் எதுவும் இல்லாத கார்த்தியின் நடிப்பு நெஞ்சில் நிற்கிறது. வழக்கமாக உடலை குலுக்கி நடனம் ஆடும் அதீத-அரிதாரம் ஏதும் பூசாத சமூக விடுதலையோடு பெண்விடுதலையும் பேசும் பெண்ணாக கதாநாயகி கேதரீனா தனது எளிய நடிப்பில் தமிழ் சினிமாவுக்கு புதியதொரு தோற்றுமையை தருகிறார். கேதரீனாவுடன் வரும் கார்த்தியின் காதல் காட்சிகள் யதார்த்தமான இருக்கிறது. காதலும் நட்பும் போட்டிபோட்டு நடிக்கும் இப்படத்தில், கலகலப்புக்கும் கலாய்ப்புக்கும் குறையில்லாத கார்த்தி "கையிக்குத்தான் எட்டித்தான்...வாயிக்குதான் எட்டல" காட்சி அமைப்பும் யதார்த்தங்களின் ஊடே மற்ற பாத்திரங்களோடேயும் பயணிக்க வேண்டிய வளர்ந்த கதாநாயகர்களுக்கு ஒரு புதிய கலைவடிவமாக இருக்கிறது எனலாம். காதலில் தோற்பது ஒரு சாதாரண நிகழ்வு; அதிலிருந்து வெளிவர நட்பு வட்டத்தில் நடக்கும் கிண்டலும் கேலியும் மன அழுத்தங்களை உடைக்கிறது என்பதை தொடர்ந்து இந்த படத்திலும் விளக்கி இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.
ஹீரோவை மட்டுமே மையமாகக் கொண்டு நகரும் இந்திய சினிமாவை மாற்றும் வகையில், இனி மக்களை மையப்படுத்தும் "மெட்ராஸ்" போன்ற திரைப்படம் கார்த்தியின் அடுத்த நகர்வாக இருக்கிறது. சந்தோஷின் மெல்லிய இசை இவர்களின் நுணுக்கமான காதல் இணைகளுக்கு இடையே இயற்கையாகவே வெளிப்படும் சுயமரியாதையை விளக்கும்படியாக உள்ளது. நண்பனாக வரும் "அன்பு" மற்றும் மேரி, மற்றுமுள்ள துணைப்பாத்திரங்கள் இணைப்பாத்திரங்களாகவே அமைத்திருப்பது, சில மாதங்கள் நாமே இவர்களுடன் வாழ்ந்து நம் கண்முன் நடக்கும் நிகழ்வாக ஒவ்வொரு காட்சிகளும் அமைந்திருக்கின்றன.
விடுதலைச் சிந்தனையின் விசால வெளியெங்கும் சிறகை விரிக்கும் பறவைகள் முட்களைக்கூட தமது கூடுகளாகக் கட்டிக்கொள்ளும் எனும் உமா தேவியின் அற்புதச் சிந்தனை "தாய்" புகழ் மக்சிம் கார்க்கி போன்ற உன்னத புரட்சியாளர்களின் எழுத்தை நினைவுக்கு கொண்டுவருகின்றன. "உயிர்வாழ முள் கூட ஒரு பறவையின் வீடே மாறிடுமே / உயிரே உன் பாதை மலராகும்" என நண்பனை இழந்த காதலனுக்கு எழுதப்படும் பாட்டு தமிழ் திரை இலக்கியத்தில் ஒரு புதிய தோற்றுமை! "அனல் காயும் பறையோசை ஓர் வாழ்வின் கீதம் ஆகிடுமே!" எனும் வரிகளும் ஒரு பெண்ணின் காதல் ஆணின் வலியோடு முடங்கிவிடாமல், தொல்லிசையின் நுணுக்கத்தையும் பண்பாட்டின் அடையாளத்தையும் மீட்கும் வலிமையையும் வெளிக்கொணர்கிறது இப்பாடல்!
வண்ணங்களில் நீலம் மானுடத்தின் தீரா அறம், அறிவு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் போதி விருட்சத்தின் வெளிப்பாடு. திசைகளற்ற விரிந்து பரந்த வான் வெளியின் முடிவுறா வண்ணம்! அன்புக்கருணை, உண்மைநட்பு, ஞானப்பெருக்கு, தானச்செருக்கு என நீள்கிறது நீல வண்ணத்தின் அழகியல்! கதாநாயகனும், மற்ற நண்பர்களும் ஏறக்குறைய எல்லாக் காட்சிகளிலும் நீல ஆடை உடுத்தி வருவது பா. ரஞ்சித்தின் தீரா அறத்தின் நீளம். கதாநாயகியின் தந்தை படிக்கும் நூலாக இருந்தாலும் நீல வண்ணம் பெரும் அடையாளமாக இருக்கிறது. தனது காதல் கணவன் அரசியல் சூழ்ச்சியால் கொல்லப்பட்டப்பின் வெள்ளையாடை உடுத்தும் பெண்ணடிமை மரபை உடைத்து, மேரி உடுத்தும் புடவை நீல வண்ணமாக இருப்பது பெண்ணியத்தின் வெளி. இறுதி கட்டத்தின் உச்சமாக சுவரில் வரையப்பட்டிருக்கும் முன்னாள் அரசியல் தலைவரின் வரைபடத்தின் மீது நீலச் சாயத்தை வீசி, நீலப்புரட்சி செய்யும் இயக்குனர் ரஞ்சித்தின் மகா தைரியத்தை பாராட்ட வேண்டும்! தணிக்கையாளர் கண்களை உறுத்திய நீல வண்ணம், எத்தனை அரசியல்வாதிகளை உலுக்காமல் விடுமா என்ன?
"மெட்ராஸ்" திரைப்படம் இதுவரை திரையில் காட்டப்படாத ஒரு அரசியல் விமிரிசனம். இடைவெளி இல்லாமல் ரெண்டரை மணிநேரம் காதல் வலியையும், மகிழ்ச்சியையும், நட்பின் பெருமையையும், மக்களின் எளிமையையும், அடையாள மற்றும் அதிகார அரசியலின் உரிமையை உரக்கப்பேசும் கலகக் குரல்! திராவிடம் விழுங்கிய துரோகம் செய்யும் "அடிமைகள் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்; நமக்கு அரசியல்தான் முக்கியம்!" என தனது சுட்டுவிரலை நீட்டும் ஜானியை உருவாக்கிய இயக்குனருக்கு மீண்டும் வாழ்த்துக்கள்! அமெரிக்காவின் 39 திரை அரங்குகள் உட்பட, பல வெளி நாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் "மெட்ராஸ்", நூற்றுக்கணகிலான இந்திய திரை அரங்குகளிலும் பெரும் ஆதரவைப் பெற்றிருப்பது எதிர்பார்த்த வெற்றிதான் என்றால் மிகையில்லை!
--சாக்ய மோஹன்--
Tuesday, October 30, 2012
Ilayaraja: The Bodhisatta of Music இசைபோதிசத்துவன் எம் இளையராஜாவின் இசைபெருவெளி!
http://www.facebook.com/sakya.mohan1?ref=tn_tnmn
இசைபோதிசத்துவன் எம் இளையராஜாவின் இசைபெருவெளி!
-சாக்ய மோஹன்-
கையில் அகப்படாத காற்றை
கைப்பற்றும் உனது இசைப்பெட்டி
காற்றிலும் அகப்படாத செவ்வோசைகளை
இழைக்கும் உனது விரல் லாவகம்
நரம்பிசை தோலிசை ஓசைகள் நிசப்திக்க
உனது கந்தர்வக் குரல் மட்டுமே மேலெழும்
எங்கள் காதுகளில் செந்தமிழல்ல உனது குரல் தான் தேன் வார்க்கும்!
உனது குரலிசையோடு
நரம்பிசை தோலிசை இழைக்க
உனது இசைவெளிப் பரப்பு
விசாலமாய் விரிந்துகொண்டே போகிறது
இன்னொரு பிரபஞ்சத்தின் திசையறியா நீலப் பெருவெளியாய் !
எமது இசை ராஜனே!
உனது ஸ்வரங்களுக்குள் கால் அரை சப்தமாமே
அந்த சப்தத்தின் வெளியாய் நீயே இசைக்கிறாய் !
அந்த சப்தத்தின் ஊடே தான் உனது
எல்லையற்ற பாட்டும் பயணிக்கிறது
எங்களையும் ஏற்றிய உனது பூதப்பேரூந்தில் !
எங்களையும் ஏற்றிய உனது பூதப்பேரூந்தில் !
உனது பறை இசையில் தான்
இந்த இசை உலகம்
பறைந்துகொண்டது பல ஸ்வரங்கள் ஆயிரங்கள்!
பறைந்துகொண்டது பல ஸ்வரங்கள் ஆயிரங்கள்!
சனாதன வெற்றுச் சங்கீதத்தை
சர்வஜனத்திற்கும் மெருகூட்டிப் பங்கிட்ட உனது இசைக்கு
எதிர்க்க வல்லது இந்த ஜாதிய மூர்க்க அன்றி
வேறில்லை என்றறிவோம்!
இந்த ஜாதி தமிழ் சாக்கடை முடை நாற்றத்தில்
முளைத்த மூர்க்கப் புலிகளுக்கு
ஒரு பாட்டிசைத்தால் உனக்கு கனடாவில் இசைக்க வாய்ப்பாம்!
ஞான சூன்யர்களின் அடிமை வாசகம் அறியாத
இசை இறை நீ!
உனது இசைப்பெருவெளியின்
முடிவிலா அழகில் மூழ்கி அலகிலா இன்புற
பல கோடி ரசிகர்கள் இறைஞ்சுகிறோம்:
உலகத் துயர் துடைக்கும் உனது இசையால்
மனிதத்தின்னிகளுக்கு இசைக்காதே
இசைபோதிசத்துவனே!
Friday, May 25, 2012
தாசரிசம் தமிழ் தேசியமல்ல! சாக்கயரின் புத்த தன்ம தத்துவம்!
பண்டிதர் குறித்த கட்டுரை முழுக்க முழுக்க அவரைக் குறித்த தவறான தமிழ்தேசியவாதிகளின் கருத்தாக பதிவாக காட்டி இருப்பது பெரும் முரணே. சூத்திரர் பத்திரிக்கையான "விடுதலை"யில் பண்டிதர் குறித்த அவதூறு கட்டுரைக்கு பதிலாக அமைய வேண்டிய கட்டுரை, "தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்த் தேசியம் என்ற ஒருமையைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதியில் முதன்முதலாய் தன்னந் தனியராய் வடித்து வார்த்தெடுத்தவர்", என்றெல்லாம் எழுதி பண்டிதரை ஒரு சிறு மொழி வட்டத்துக்குள் முடக்கிவிட முயற்சியாகவே இருக்கிறது.
நிச்சயமாக நீங்கள் குறிப்பிடும் "தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்த் தேசியம் என்ற ஒருமையை", எந்த கட்டத்திலும் பண்டிதர் முன் வைக்கவில்லை. தமிழ் தேசியம் குறித்த லட்சியம் ஏதும் போதிசத்துவர் நிலை அடைந்த பண்டிதர் அயோத்திதாசருக்கு இருந்ததாக ஒரு ஆதாரமும் இல்லை. நீங்கள் ஒரு தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நபராகவே உங்கள் கட்டுரையை புனைந்துள்ளீர் என்பதும், தமிழ் தேசியம் பேசும் தலித் கட்சிகள் சிலவற்றை மனதில் நிறுத்தி எழுதி இருப்பதாகவும் உங்கள் சிறு கட்டுரை அமைந்திருக்கிறது. கீழ்வரும் பண்டிதர் மீதான உங்கள் பார்வை மிக அபத்தமானது. பண்டிதரின் புத்த-தம்ம சிந்தனைக்கு தீயிடும் ஆபத்தானது:
"மொழிவழி தேசிய வகைப்படுத்தலான அறிவுபூர்வ முறையைத் தற்காலத்திய தமிழர்கள் பெற்றிருப்பதற்கு அவருடைய எழுத்தும், சிந்தனையும், களப்பணியிலிருந்த கவனம் நிரம்பிய பற்றுறுதி கொண்ட எதிர்காலத் திட்டங்களும் தொலைநோக்குப் பார்வையுமே காரணம். தமிழன் என்பதற்குப் பறையனொழிந்த பிற சாதிகள்�என்று திட்டமிட்டுக் கள்ளத்தனமான கருத்தியலாளர்கள் இன ஒருமையைப் பிளவு படுத்தியிருந்த போது தமது ஆய்வினூடாகவே அப்பூடக சதிகளை முறியடித்தார்."
பண்டிதர் குறிப்பிடும் "தமிழன் என்பதற்கு 'பறையனொழிந்த பிற ஜாதிகள்' என்று முக்கிய ஆங்கிலப் பதிவுகளிலும், சென்னை பலகலை கழக வெளியீடுகளிலும் பதிவாகி இருப்பது சரிதானே? பறையர்கள் தமிழர்களா? தமிழ் பேசுவதனால் பறையர்கள் தமிழர்களா? மராட்டி பேசிய பாபாசாஹெப் அம்பேத்கர் மராட்டியன் இல்லாதபோது, தமிழ் பேசி தமிழில் புலமை பெற்ற காரணத்தினால், பண்டிதர் அயோத்திதாசர் தமிழரா? அடிப்படையில் ஹிந்து மதத்தை அடிப்படையாக கொண்டு எழுந்த ஜாதிகளே தமிழர்கள். "பறையர் வேறு; தமிழர் வேறு", என ஆனந்தரங்க பிள்ளை கூறுவது நிஜமாகும் முன்பு, எனது தந்தை என்னிடம் அடிக்கடி கூறுவார், "தம்பி தமிழ்லனை நம்பாதே! அவனுங்க எல்லாம் சூத்திர புத்திய காட்டிடிவானுங்க", என்பார். அப்போதுதான் எனக்கு புரிந்தது பறையர்கள் தமிழர் அல்ல என்று. அதன் பிறகு பல வரலாற்று செய்திகள் என்னைப் போன்ற எத்தனையோ ஜாதியற்ற பறையர்களை விழிப்படைய வைத்தது.
பண்டிதர் எந்த காலத்திலும் தம்மை தமிழர் என அடையாளப் படுத்திக்கொள்ள முனைந்ததில்லை. மாறாக, பறையன் என்பவன் இழிந்தவன் என்னும் தமிழ் ஜாதிகளின் கட்டுக் கதையை போட்டு உடைக்கிறார் பல்மொழி வித்தகரான பண்டிதர். பறையர்களின் ஆதி மொழியாக பாலியை மட்டுமே காட்டுகிறார். தம்மம் வளர்க்க புத்த அறிவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட மொழியாகவே தமிழை காட்டுகிறார். பாலி மொழியிலிருந்து எவ்வாறு தமிழை உருவாக்கினர் என வீரசோழியம், சூளாமணி, மணிமேகலை என நீள்கிறது பண்டிதரின் வரலாற்றுப் பார்வை. தம்மை சாக்கிய குல மக்களாகவே காட்டுகிறாரே ஒழிய எந்த காலத்திலும் தமிழர் என அவர் முன்மொழியவில்லை. போதி விருட்சம் தந்த தம்மத்தின் அடியொற்றி நிற்கும் ஹீன-தேர சாக்கைய குடிகள் தம்மத்தை பறைந்ததால் பறையர் என அழைக்கப்பட்டனர் எனும் சொல்லறிவியலில் தலித் குடிகளை தீண்டாமை தீதிலிருந்து விடுவிக்கிறார். பள்ளர் மற்றும் சக்கிலியரை சாக்கைய குடிகளாக அடையாளப் படுத்த அவர் முனைந்ததாக தெரியவில்லை என்றாலும், பறையர் எனும் சொல்லாடலை தீண்டாமை இழிவிலிருந்த விடுவித்து எண்ணற்ற ஆதாரங்களுடன் பறையர்கள் புத்தரின் தன்ம-கன்ம செய்திகளை பரப்ப எழுந்த சாக்கயரே எனும் வரலாற்று மீட்சியை தமிழ் தேசியத்திற்குள் புதைக்க வேண்டாம். பாலியோ, சமஸ்கிருதமோ, தமிழோ எல்லாம் புத்த தன்மம் பரவவே என்கிறார்.
தமிழ் சமூகம் ஜாதியை அடியொற்றி கட்டப்பட்ட ஹிந்துயிசத்தை வேர்க்கொண்டதே. இதை பண்டிதர் முறியடிக்க முனைததில்லை. மாறாக, தமிழ் பேசும் தலித் குடிகளின் புத்த சமயத்தின் மூல ஆதாரங்களை வெளிக்கொணர தம் வாழ்நாள் முழுதும் போராடினார் என்பதே உண்மை. தமிழ் மொழி வளர பண்டிதர் எழுதவில்லை; மாறாக, தன்மம் வளர பரவ ஜாதி ஒழிய தீண்டாமை ஒழிய மட்டுமே அவர் தமது எழுத்தை பயன்படுத்தி இருக்கிறார் என்பதே மெய். தமிழ் தேசியத்தை தலையில் வைத்து அரசியல் கூத்தாடி அண்ணல் அம்பேத்கரின் புத்த நெறிகளை புறக்கணிக்கும் சில தலித் கட்சிகள் போன்று வளரும் இளைய தலித் அறிவர்கள் மொழியின சாக்கடையில் புறந்தள்ளப்படுவது ஊழ் தானோ?
சேரி மக்கள் மொழி தமிழ் என்றும், சேரியில் மட்டுமே தமிழ் வாழ்கிறது என்றும் செவ்வியல் நா உருகப் பேசி கவர்ச்சி அரசியல் நடத்தி சேரி சமூக மாணவர்கள் தமிழைத்தவிர மற்ற மொழிகளை கற்றுத் தேறாத நிலையில், பல அரிய வாய்ப்புகளை இழந்து பலவீனமாகி வருகிறது இன்றைய-நாளைய சேரி சமூகம்.
வரலாறு அறியாது தலித் தலைமைகள் நடத்தும் தமிழ்-தேசிய அரசியல் இதோ இன்றைக்கு சூத்திர (தமிழர்) ஜாதிகள் கைப்பற்றிவிட்டனர். ஜாதி மலிந்த தமிழ் சமூகத்தில் மொழி-இன அரசியல் சூட்சுமங்கள் ஜாதியற்ற தலித் குடிகளுக்கு குறிப்பாக புத்த குடிகளான பறையர்களுக்கு ஒத்து வராது. உங்களின் வரலாற்றுப் பிழைக்கு பிரமாண்டமான மேதையை பண்டிதரை பலி வாங்காதீர்கள்! தாசரிசம் என நாம் கடினப்பட்டு வெளிக்கொண்டுவந்தது இற்றுப் போகும் தமிழ்-தேசியம் அல்ல; தாசரிசம் சாக்கைய பெருங்குடிகளின் தன்ம தத்துவமே என்பதை அறிக!
Subscribe to:
Posts (Atom)